Tuesday 10 April 2012

அகநானூற்றில் அன்பின் வலிமையும் நட்பின் உயிர்மையும்-முனைவர் மு. மூர்த்தி


அகநானூற்றில் அன்பின் வலிமையும் நட்பின் உயிர்மையும்

மாந்தர்தம் அகம், புறம் சார்ந்த வாழ்க்கை முறைகளைக் காட்டுவன சங்க இலக்கியங்கள். இவ்விலக்கியங்களில் அகப்பாடல்களே மிகுதியாகும்.  அகப்பொருளே மிகுதியாகக் கூறப்படினும் அகவாழ்வியலை ஒட்டி புறவாழ்வியல் கூறுகளும் முறையே கூறப்பெற்றுள்ளன.  அவ்வகையில் அகநானூற்றில் அன்பின் செழுமை வலிமை பெறுவதும் அந்த அன்பு நிலைபெறுவதற்கு நட்பு துணை புரியும் பாங்கினையும் அறிந்து போற்ற முடியும்.

அகநானூற்றுப் பாடல்கள் ஐந்திணை ஒழுக்கங்களை விரிவாக எடுத்து விளம்புகின்றன.  இச்சிறப்புக் கருதியே அகம் என்ற பெயரை அகப்பொருள் என்று பொருள் என்று பொருள்படும் பொதுப்பெயரை இந்த நானூறு பாடல்களுடன் இணைத்தனர் என்று சாமி. சிதம்பரனார் எட்டுத்தொகையும் தமிழர் பண்பாடும் என்னும் நூலில் குறிப்பிடுகின்றார்.(பக்.90) அந்நிலையில் இந்நூல் ‘அகம்‘ என்னும் சொல்லை நேரிடையாகப் பெற்று தமிழ் இலக்கிய வரலாற்றிலும் தமிழர்தம் வாழ்வியலிலும் சிறந்து நிற்கிறது.  பிற இலக்கியங்களைப் போலன்றி பாடலடிகள் மிகுதியாக உள்ளதால் அகத்தின் ஆழத்தையும் நட்பின் உயிர்மையையும் வரலாற்று நிகழ்வுகளையும் விரிவாகக் கூற முடிந்துள்ளது.

அகம் பொதுமையாதல்

அகத்தின் சிறப்பு பொதுமைஎன்னும் பண்பால் அமைந்ததாகும்.  அவ்வகையில் அகஇலக்கியத்தில் மாந்தர்களின் பெயர்கள் சுட்டிக் கூறப்படமாட்டாது என்பது தொல்காப்பிய மரபாகும்.
மக்கள் நுதலிய அகனைந்திணையும்
சுட்டி ஒருவர் பெயர் கொளப்பெறாஅர் ( அகத்திணையியல் நூ,54)

இத் தொல்காப்பிய மரபைப் பின்பற்றி அக இலக்கியங்களில் தலைவன், தலைவி, தோழன், தோழி, நற்றாய், செவிலி, பாணன், பாடினி என்றவாறு பொதுமைப்படுத்தப்பட்டு மக்கள் எல்லோருக்கும் எப்பொழுதும் பொருந்தும் நிலையில் அமைந்துள்ளதை அறிந்து போற்ற முடியும்.



அகத்தின் சிறப்பில் நட்பின் உயிர்மை:

தமிழர்தம் அகவாழ்வியலில் தலைமக்களின் சேர்க்கை முதன்மையானது, இச்சேர்க்கையில் தோழன், தோழியின் பங்கு குறிப்பிடத்தக்கது. இவ்விருவரிலும் தோழியின் செயல்பாடுகள் மிகுதியானவை என்பதை அகநானூற்றுப் பாடல்கள் மூலம் அறிந்துகொள்ளமுடியும்.
தலைவிக்கு நல்வாழ்வு அமைவதில் பெரிதும் மகிழ்பவள் தோழியே. தம் தோழியாக தலைவியைத் திருமணம் செய்து கொள்ளாமலே காலம் கடத்துவதைக் கண்டு, அவன் மனதில் பதியுமாறு நல்வார்த்தைகளைக் குறிப்பாகக் கூறுவாள். அவன் நாட்டில் விலங்குகள் இயல்பாக இன்பத்தைப் பெறுவதைச் சுட்டிக்காட்டி, எதிர்பார்ப்புடன் அன்பிணைப்பில் எம்தலைவியை அணுகினால் நிலையான இன்பத்தை எளிதில் பெற முடியும் என்று தலைவனின் மனதில் பதியுமாறு நல்வார்த்தைகளைக் குறிப்பாகக் கூறுவாள். அவன் நாட்டில் விலங்குகள் இயல்பாக இன்பத்தைப் பெறுவதைச் சுட்டிக்காட்டி, அன்பினணப்பில் எம் தலைவியை அணுகினால் நிலையான இன்பத்தை எளிதில் பெறலாம் என்று தலைவனின் மனதில் பதியுமாறு நட்புணர்வுடன் எடுத்துரைக்கிறாள்.           
.
குறியா இன்பம் எளிதின் நின்மலைப்
பல்வேறு விலங்கும், எய்தும் நாட
குறித்த இன்பம் நினக்கெவன் அரிய ( அகம், பா, 2, 8 10)

என்னும் பாடலடிகள் மூலம் தலைவன், தலைவியை விரைவில் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்னும் நிலையைத் தலைவனுக்குத் தோழி உருவாக்குவதை உணரலாம். இக்கூற்றுடன் நின்றுவிடாமல் தனக்கும் தலைவிக்கும் உள்ள நட்பின் உயிர்மையையும் ஒருமித்த அன்பையும் முறையே எடுத்துரைக்கும் பாங்கு குறிப்பிடத்தக்கது.

தலைவனை நோக்கி, எம் தலைவி மீது நீ மட்டும் மிகுதியும் அன்புடையவனாய்க் கருதுகிறாய்.  அவள் மீது பெற்றோரும் நானும் உயர்வான அன்பு வைத்திருக்கிறோம் என்பதை அவன் உணருமாறு எடுத்துரைக்கிறாள்.  எங்கள் நட்பு என்றும் பிரிக்க முடியாததாகும்.

யாமே பிரிவு இன்று இயந்து துவரா நட்பின்
இருதலைப் புள்ளின் ஓருயிரம்மே”(பா.12, 4-5)

என்னும் அகநானூற்றுப் பாடலடிகள் தோழியின் கூற்றாய் அமைந்து, எங்களின் அன்பு நட்பால் வலிமை பெற்றுள்ளது என்பதைத் தலைவனுக்குச் சுட்டக் காட்டுவாள்.  எனவே, எம் தலைவியைக் களவில் சந்திப்பதைத் தவிர்த்து கற்பு மணமாகிய இனிய வாழ்வை எதிர்கொள்.  அப்பொழுதுதான் அவள் மீது அன்புள்ள பெற்றோர்களும் தலைவியும் ஒருசேர மகிழ்வர்.  அம்மகிழ்வு அனைவருக்கும் பொதுநிலையில் இனிமை தருவதாகும்.  அந்நிகழ்வை விரைவில் செய்வாயாக என்று தோழி, தலைவனிடம் கூறும் பாங்கு உளவியல் தன்மையில் அமைந்ததாகும்.  இங்கு தோழி நட்பினளாகிய தலைவிக்கு இனிமை சேர்ப்பவளாய் அமைந்து நல்வாழ்வு அமைய துணைநிற்கும் போக்கினைப் பார்க்க முடிகிறது.

அன்பின் வலிமையைக் காட்டும் நட்பு

காதலில் களவுவாழ்வு அனைவரும் போற்றும் கற்பு வாழ்வாக மலர வேண்டும்.  இக்கற்பு வாழ்வில் காதல் நிலையாக நிற்க வேண்டும்.  இதுவே உண்மை அன்பின்  வலிமையாகும்.  இந்நிகழ்வைத் தோழி தலைவனிடம் எடுத்துக்கூறி உண்மை அன்பு நிலைபெற நற்பாலமாக அமைகின்றாள்.  ஊர்மக்கள் அறிய தலைவியைத் தலைவன் மணம் செய்ய வேண்டும் என்று வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வற்புறுத்துவாள்.  தலைவனோ களவு வாழ்வையே விரும்பி காலம் கடத்துகின்றான்.  இவனின் போக்கை நேரிடையாகக் கண்டிக்காதத் தலைவி வாட்டமுறுகிறாள்.  இதனை உணர்ந்த தோழி, அனைவரும் அறிய தலைவியை உடனே மணம் புரியுமாறு குறிப்பாக வற்புறுத்துவாள்.
தலைவியைக் காண வரும் உன்வருகை தடைபட்டதால் எம் தலைவி பெரிதும் வருத்தமுறுகிறாள்.  இந்நிலை தெரிந்தும் ஏன் காலம் தாழ்த்துகிறாய்.  அறிவுடையோர் நல்இன்பத்தையே அடைய விரும்புவார்கள்.  எனவே, அறிவுடைய நற்செயலைச் செய்வதற்கு முழுமையாய் ஈடுபடு என்று தலைவனின் பாங்கன் போன்று பாங்கி உரிமையுடன் எடுத்துரைக்கும் நிலையினை அகநானூற்றின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

நாள்இடைப் படின் என்தோழி வாழாள்
தோளிடை முயக்கம் நீயும் வெய்யை
கழியக் காதலர் ஆயினும் சான்றோர்
பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்
வரையின் எவனோ? வான்தோய் வெற்ப(பா.112.9-13)

என்னும் பாடலடிகள் மூலம் தலைவன் மீது தலைவி வைத்திருக்கும் அன்பும், திருமணம் செய்வதில் காலம் தாழ்த்தியமையால் தலைவிபடும் துயரமும் ஒருசேர உணரப்படுகிறது.  இவ்விருவரின் சேர்க்கையில் தோழி ஓர் இணைப்புப்பாலமாக விளங்குவதை அறியமுடிகிறது.

அன்பே முதன்மை

குடும்பவாழ்வியல் நல்நிலையில் அமைவதற்கு அன்பு நிலைத்த காரணமாய் அமைகிறது.  அவ்வாழ்வியல் சிறக்க பொருள் ஈட்டுவது கட்டாயமாகிறது.  களவு, கற்பு என்னும் இரு நிலைகளிலும் பொருள் தேடுதல் பொருட்டு தலைவன் பிரிதலுண்டு.  பொருளைப் பெறநினைக்கும் தலைவன், தலைவியின் மாறுபட்ட தோற்றத்தைக் கண்டு தன்போக்கினைத் தற்காலிகமாக மாற்றிக் கொள்ளும் நிலையையும் பார்க்கமுடியும்.  இந்நிலையைச் செலவழுங்கல்என்னும் துறையில் அடக்கிப் பார்க்கலாம்.

ஓவச் செய்தியின் ஒன்று நினைந்து ஒற்றி
பாவை மாய்த்த பனிநீர் நோக்கமொடு
ஆகத்து ஒடுக்கிய புதல்வன் புன்தலைத்
தூநீர் பயந்த துணையமை பிணையல்
மோயினள் உயர்த்த காலை மாமலர்
மணிஉரு இழந்த அணியழி தோற்றம்
கண்டே கடிந்தனம் செலவே(பா.5.20-26)

என்னும் பாடலடிகள் மூலம் தலைவியின் பெருமூச்சால் நல்மலர்கள் தம் தன்மையை இழந்தன.  அவளும் பெரிதும் வாட்டமுற்றாள்.  இந்நிகழ்வைக் கண்ட தலைவன் தான் பொருள் ஈட்டச் சென்று விட்டால் எங்ஙனம் இருப்பாள் என்று  உணர்ந்து தன் செலவினைத் தவிர்த்து விடுகின்றான்.

திருவள்ளுவரும் செலவழுங்கல் துறையைச் சிறப்பாகக் காட்டுகிறார்.

செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க்கு உரை

என்னும் குறள் மூலம் தலைவன் மீது தலைவி மிகுந்த அன்பு வைத்திருந்ததால் தன்னை விட்டுப் பிரிந்து செல்லக் கூடாது என்று கருதும் போக்கினைப் பார்க்கிறோம். அதற்கேற்றார் போன்று தலைவனும் தன் பயணத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்து, அன்பிணைப்பில் இனிமை காணும் போக்கினைப் பார்க்கிறோம்.

தலைவியின் உள்ளுணர்வை உணர்ந்த தலைவன் தான்சென்ற செயலில் வெற்றி பெற்று, தலைவியைக் காண்பதற்குத் தேர்ப்பாகனிடம் விரைவாகத் தேரை ஓட்டும்படிக் கூறுகின்றான்.  எம் தலைவி நல் அழகினையும் நற் பண்பையும் ஒருசேரப் பெற்றவள்.  அவள் மகிழுமாறு சென்று காணவேண்டும்.  எனவே, தேரினை விரைவாகச் செலுத்துமாறு கட்டளையிடுகிறான்.

அருங்கடிக் காட்டான் அஞ்சுவரு மூதூர்த்
திருநகர் அடங்கிய மாசுஇல் கற்பின்
அரிமதர் மழைக்கண் அமைபுரை பணைத்தோள்
அணங்குசால் கலிமாப் பூண்ட தேரே(பா.114.12-16)


மேற்காட்டிய பாடலடிகள் மூலம் தலைவியின் மீது தலைவன் வைத்திருக்கும் உண்மை அன்பு வெளிடப்படுகிறது.

பொருட்செல்வம் அனைவரையும் பொருள் உடையவராய் மாற்றும் தன்மையது.  அகம், புறம் என்றும் இரு வாழ்வியல் நிலைகளிலும் பொருளின் தேவை மிகுதியாகும்.  இத்தகைய செல்வம் தம் வாழ்விற்கும் பொது வாழ்விற்கும் பெரிதும் துணைநிற்கும் தன்மையதாகும்.  இவ்வறிவினை தமிழர்கள் நன்கு உணர்ந்திருந்த செய்தியினை அகநானூற்றின் மூலம் அறிந்து கொள்ளமுடியும்.

அறன்கடைப் படாஅ வாழ்க்கையும் என்றும்
பிறன்கடைச் செலாஅச் செல்வமும் இரண்டும்
பொருளின் ஆகும்(பா.155.1-3)
 
    முறையான செல்வப்பெருக்கால் அறவாழ்க்கை சீராய் அமைவதற்கும் எவரிடமும் இரவாதத் தன்மையைப் பெறுவதற்கும் உரிய சூழ்நிலை உருவாகும் என்பதை மேற்கூறிய பாடலடிகள் உறுதிப்படுத்துகின்றன.

தொகுப்புரை

அகம்என்னும் சொல்லை முதலாகப் பெற்றுள்ள இந்நூல் மாந்தர்தம் அகவாழ்வியலை முழுமையாகக் காட்டும் வாழ்வியல் நூலாகும்.

   தலைமக்களின் வாழ்வியலில் பாங்கன் பாங்கி ஆகியோரின்   செயல்பாடுகளில் தோழியின் பங்கு மிகுதியுமாய் இருப்பதை அகநானூற்றின் மூலம் உணரலாம்.  தலைமக்கள் மீது தோழிகொண்ட அன்பு நட்பின் உயிர்ப்பாக அமைந்துள்ளதை அறிந்து போற்ற முடியும்.

தலைமக்களின் ஒருமித்த அன்பு வளர்ச்சியுற்று அருளாகச் சமூகத்திற்கு உதவும் உயர்நிலையை அடைவதையும் உணரலாம்.

மாந்தர்தம் வாழ்வியலுக்குப் பொருட்செல்வம் தேவை என்பதும் முறையாய் ஈட்டிய செல்வம் அகவாழ்வில் தமக்கும் பொதுமைக்கும் பயன்படும் பாங்கினையும் இந்நூலின் மூலம் அறியமுடிந்தது.

பொதுநிலையில் மாந்தர்தம் அகவாழ்வியலில் அன்பு கலந்த வாழ்க்கையே இனிய வாழ்க்கைக்கு வழியமைக்கும் என்றும் இந்த அன்பு நெறியே அருள் நெறியாக மாறி அனைவர்க்கும் நலத்தைக் கொடுக்கும் என்பதும் அகநானூற்றின் மூலம் அறிந்து கொள்ள முடியும்
 ------------உதவிப்பேராசிரியர்(ம)தலைவர்,தமிழ்த்துறை, குருநானக்கல்லூரி.

No comments:

Post a Comment